`தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தைப் பார்க்க நியமிக்கப்படும் இரண்டு வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை மனுதாரர் ஏற்றுக்கொள்வாரா என்பது குறித்து தெரிவிக்க மனுதாரரின் வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த பசும்பொன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ``திரைப்பட நடிகர் கார்த்தி நடித்த `தீரன் அதிகாரம் ஒன்று' என்ற படம். இத்திரைப்படம் தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் உள்ள 235 பிரிவு சமுதாயத்தினரைத் தவறாகச் சித்திரித்தும் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் குற்றப் பரம்பரை என்ற வார்த்தை இடம் பெறுகிறது. இந்த வார்த்தை பல இடங்களில் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகன் ராஜஸ்தான் காவலர்களிடம் குற்றப் பரம்பரைச் சட்டம் பற்றிக் கூறுகிறார். மேலும், கதாநாயகன் குற்றப் பரம்பரையின் வரலாறு என்ற தமிழ்ப் புத்தகத்தைப் படிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதுவும் தவறானது. மேலும், தமிழகத்தில் உள்ள வேட்டைக்காரன் சமுதாயத்தினரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆகவே, திரைப்படச் சட்டம் 1952-ன் படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அவதூறு பரப்பும் வகையில் திரைப்படங்கள் வெளியிடப்படக் கூடாது. எனவே, தீரன் திரைப்படத்தில் உள்ள சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்கும் வரை இந்தப் படத்துக்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும். இந்த படத்தில் கிடைக்கும் 50 சதவிகித பணத்தை சீர்மரபினர் சமூக மேம்பாட்டுக்காகச் செலவிட உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி மகாதேவன், நான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. திரைப்படத்தைப் பார்க்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்தப் படம் 6 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. எனவே, இந்தப் படத்தைப் பார்த்து அது குறித்த அறிக்கை சமர்பிக்க 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மனுதாரர் அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்தச் செலவை மனுதாரர் ஏற்றுத்கொள்வாரா என்பதை மனுதாரரிடம் கேட்டுத் தெரிவிக்க மனுதாரரின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
No comments:
Post a Comment