நவம்பர் 25, பெண்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாள். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவது அறிந்த விஷயமே. ஆனால், சில புள்ளிவிவரங்கள் சொல்லும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தாம்சன் ரெயூட்டர் நிறுவனம் எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, மாநகர அளவில் டெல்லி மற்றும் பிரேசிலில் இருக்கும் சோ பாவ்லோ என்கிற நகரங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து, ஒரு மணி நேரத்துக்கு 26 (அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும்) வழக்குகள் பதிவுசெய்யப்படுகிறது.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் 90 சதவீதத்துக்கும் அதிகமாகப் பதிவுசெய்யப்படுவதில்லை என்கிறது அரசின் ஒரு புள்ளிவிவரம்.
பதியப்படும் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் 95 சதவிகிதம் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்தவராகவே குற்றவாளி இருக்கிறார்.
கடைசியாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, 2015-ம் ஆண்டில் மட்டும் 34,651 பாலியல் வன்புணர்வு வழக்குகளும், 4,437 பாலியல் வன்புணர்வு முயற்சி வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
2005 முதல் 2014 வரை பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளின் சதவீதம் 34% அதிகரித்திருக்கிறது. கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது, 2015-ம் ஆண்டு பதியப்பட்டப் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் சதவீதம், அதற்கு முந்தைய (2014) வருடத்தைவிட 3 சதவீதம் குறைந்துள்ளது.
2015 கணக்குப்படி, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில்தான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், தமிழகத்தில் 5847 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நடைபெறும் குற்றங்களில் பெரும்பாலும் வன்முறையைச் செலுத்தும் நபர் கணவராகவோ, உறவினராகவோ இருக்கிறார். அந்தப் பெண்ணின் சமூக உறவைக் குலைக்கும் நோக்கத்திலே குற்றங்கள் நடைபெறுகின்றன.
2015 கணக்குப்படி, இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டதில் 9 முதல் 11 சதவீத வழக்குகள், பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்த வழக்குகள். இதில், பெரும்பாலும் பாதிக்கப்படும் பெண்களின் சராசரி வயது 18 முதல் 30.
ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், தங்கள் குடும்பத்து பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வீட்டுக்குத் திரும்பவில்லை என்றால், பதற்றம் அடைவதாக 87% டெல்லி பெற்றோர்களும், பெங்களூரு மற்றும் மும்பையில் 54% மற்றும் 30% பெற்றோர்களும் பதில் அளித்துள்ளார்கள். சென்னையில் 48% பெற்றோர்கள் பயப்படுவதாக சொல்லியிருக்கிறார்கள்.
2016 ஆண்டு பதியப்பட்ட எந்த வழக்குகளின் எண்ணிக்கையையும் இன்னும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள்மீது செலுத்தப்படும் வன்முறைகள் ஒழிப்பு நாளை வெறுமனே பேசித்தீர்ப்பதைவிட, குற்றங்களைத் தடுப்பது எப்படி என்ற ஆலோசித்து, அதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment