Saturday, 16 December 2017

பெரியபாண்டியனை சுட்டுக் கொன்றது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியே! :- ராஜஸ்தான் காவல்துறை


  

பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 16, 09:28 PM

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8–ந்தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், போலீஸ் ஏட்டுகள் எம்புரோஸ், குருமூர்த்தி, முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.  ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெயத்ரன் தாலுக்கா ராமாவாஸ் கிராமம் தான் பயங்கர கொள்ளையன் நாதுராமின் சொந்த ஊர் ஆகும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த நாதுராமை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோர் தங்களுடன் வந்திருந்த 3 போலீசாருடன் சுற்றி வளைத்தனர்.  இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சென்னை நகர உயர் போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியால் தான் சுட்டுள்ளனர் என்றும், சுட்டது கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தான் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த கொள்ளையன் யார்? என்பதை வெளியிடவில்லை.

தனது துப்பாக்கி, தாக்குதலில் கீழே விழுந்தது என்றும் அதனை பெரிய பாண்டியன் எடுத்துள்ளார் என்றும் முனிசேகர் தனது புகாரில் தெரிவித்து இருந்துள்ளார்.  கொள்ளையர்கள் கட்டை மற்றும் இரும்பு தடியால் தாக்கினர் என்றும் முனிசேகர் புகாரில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment