Friday, 1 December 2017

கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

  

கலபுரகி அருகே தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

டிசம்பர் 02, 05:02 AM

பெங்களூரு,

கலபுரகி அருகே தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.

கலபுரகி புறநகரில் உள்ள ஒரு மதுபான கடையின் மேலாளர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த கொள்ளையர்கள் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து, அவர் கலபுரகி புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

இந்த நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஜே.டி.யூ. படாவனேயில் பதுங்கி இருப்பதாக பரகதாபாத் போலீசாருக்கும், கலபுரகி புறநகர் போலீசாருக்கும் நேற்று முன்தினம் நள்ளிரவில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பரகதாபாத், கலபுரகி புறநகர் ஆகிய போலீஸ் நிலையங்களின் போலீசார் இணைந்து கொள்ளையர்களை பிடிக்க விரைந்தனர். அப்போது, அங்கு 3 கொள்ளையர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

இந்த வேளையில், போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் 3 பேரும் ஓடினார்கள். போலீசில் சரண் அடையும்படி போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். ஆனாலும், அவர்கள் போலீசில் சரண் அடையவில்லை. மேலும், ஆத்திரமடைந்த அவர்கள் ஆயுதங்களால் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் பரகதாபாத் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வாகித், கலபுரகி புறநகர் போலீஸ்காரர்கள் கேசாவா, உசேன் பாஷா ஆகியோரும் காயம் அடைந்தனர். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கொள்ளையர்களை கைது செய்ய முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனால், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வாகித் துப்பாக்கியால் கொள்ளையர்களை நோக்கி சுட்டார். இதில், ஒரு கொள்ளையனின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவன் ஓட முடியாமல் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தான். மற்ற 2 பேரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து, குண்டு காயம் அடைந்த கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், முகமது இர்பான் (வயது 25) என்பதும், அவர் தொடர்ந்து தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர், முகமது இர்பான் சிகிச்சைக்காக கலபுரகி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்

No comments:

Post a Comment