Saturday, 1 December 2018

காசு கொடுத்து டீ சாப்பிட்ட கமல்!

கமல்ஹாசன் சாலையோரத்தில் டீ குடித்து அரசு பேருந்தில் பயணம்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற இடத்தில் கமல்ஹாசன் சாலையோர டீக்கடையில் தனது கட்சியினருடன் டீ குடித்து அங்குள்ள மக்களிடம் பேசி புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினரோடு புயல் பாதித்த பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளைக் கேட்டு வருகிறார். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இன்று பல ஊர்களுக்கு சென்றார்.

தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட தம்பிக்கோட்டை கிழக்காடு என்ற பகுதிக்குச் சென்ற அவர் அங்குள்ள டீக்கடைக்கு தனது கட்சியினருடன் சென்று டீ குடித்தார். கமல்ஹாசனைப் பார்த்ததும் அங்குள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குடித்த அத்தனை டீக்கும் கமல்ஹாசனே காசு கொடுத்தார்.

பாட்டியின் அன்பு

டீக்கடையில் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு பாட்டி வாஞ்சையுடன் கமல்ஹாசனின் கன்னத்தைப் பிடித்து பேசினார். அவருடன் பாசமாக பேசி அவரது குறைகளைக் கேட்டார் கமல்ஹாசன்.

 

   

ஏரிப்புறக்கரை கிராமம்

இதேபோல மீனவர் கிராமமான ஏரிப்புறக்கரை கிராமத்திற்கும் கமல்ஹாசன் சென்றார். அங்கு கிராமம் முழுவதையும் அவர் சுற்றிப் பார்த்துப் பார்வையிட்டார். தங்களுக்கு இதுவரை எவ்வித நிவாரண உதவிகளும் அரசு சார்பாக வராத காரணத்தினால் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தேர்தலில் ஓட்டிற்காக மட்டும் வரும் அரசியல்வாதிகள் மத்தியில் தங்கள் குறைகளை பார்க்க நேரில் வந்திருந்த கமலிடம் தங்கள் குறைகள் அனைத்தையும் தெரிவித்தனர்.

   

இதுவரை யாரும் வரவில்லை

இங்குள்ள மக்கள் மட்டுமல்லாமல் கமல் போன இடமெல்லாம் யாரும் எங்களைப் பார்க்க வரவில்லை. அதிகாரிகளையே காணோம் என்று குமுறலை வெளியிட்டனர். இதுகுறித்து கமல் கூறுகையில், இது ஆச்சரியமாக இருக்கிறது. அமைச்சர்கள் பேச்சை நிறுத்தி விட்டு வேகமான செயல்பாடுகளில் இறங்க வேண்டும் என்றார்.

   

எல்லாம் போச்சு

ஏரிப்புறக்கரை கிராமத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகள் அனைத்தையும் இழந்து விட்டனர். வீடுகள் இடிந்து விட்டன. மொத்த வாழ்வாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மீன் பிடி வலைகள் கூட மிஞ்சவில்லை. மீண்டு வர பல வருடமாகும் என்று கமல்ஹாசனிடம் அவர்கள் குமுறினர். அவர்களுக்கு கமல் ஆறுதல் தெரிவித்தார்.


Oneindiya

No comments:

Post a Comment