Tuesday, 14 November 2017

காதலை ஏற்க மறுக்கும் பெண்ணை எரித்துக் கொல்லும் நிலைக்கு இளைஞர்கள் ஆளாவது ஏன்?

காரைக்கால் விநோதினி மீது ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமிலம் வீசப்பட்ட அதே நாளில், சென்னை வேளச்சேரியில் ஒரு பெண் இன்று எரித்துக் கொல்லப்பட்டதாக, இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு சம்பவங்களுக்கும் காரணம் ஒன்றுதான், `இரண்டு பெண்களும் தன்னை காதலிப்பதாக சொன்ன ஆணின் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.'

விநோதினி முதல் இந்துஜா வரை:

விநோதினியை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. காரைக்காலைச் சேர்ந்த பொறியாளர். அவரை அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் குமார் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், விநோதினி அவரின் காதலை நிராகரித்ததால், ஆத்திரமடைந்த சுரேஷ் குமார் விநோதினி மீது அமிலம் வீசியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.

மூன்று மாத தீவிர சிகிச்சைக்குப்பின் விநோதினி மரணமடைந்தார்.

தமிழகத்தில் மீண்டும் அமில வீச்சில் ஒரு பெண் மரணம்விநோதினி வழக்கில் சுரேஷுக்கு ஆயுள் தண்டனை

விநோதனி மீது அமிலம் வீசப்பட்டது 2012-ம் ஆண்டு, நவம்பர் 14-ம் தேதி. சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து அதே நாளில், இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் இந்துஜா. தனியார் நிறுவனத்தில் பணிப்புரிகிறார். அவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார்.ஆனால், அவரது காதலை மறுத்து இருக்கிறார் இந்துஜா. இதனால் கோபமடைந்த ஆகாஷ், அவரையும், அவரது குடும்பத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்துஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தரவுகளை ஆய்வு செய்து பார்த்தால், இந்தியாவில் பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன.

தரவுகள் சொல்வது என்ன?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெல்லியில், தன்னை திருமணம் செய்ய மறுத்தார் என்ற காரணத்துக்காக ராதே ராம் அவரது சகோதரி அனிதாவின் உதவியுடன் ஒரு பெண் மீது அமிலம் வீசினார். இதில் அந்த பெண்ணின் கண்பார்வை மோசமாக பாதிக்கப்பட்டது. இதுதான் தலைநகரின் நிலை.

Image copyrightGETTY IMAGES

Image captionஇந்தியாவில் அதிகரிக்கும் அமில வீச்சுகள்

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள், 2014- ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2015-ல் பெண்கள் மீதான அமில வீச்சுகள் 9 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறுகிறது.

அதாவது, 2014-ம் ஆண்டில் 203- ஆக இருந்த அமில வீச்சு சம்பவங்கள், 2015-ல் 222 ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் பெண்களை பின்தொடர்ந்து தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் 33 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளன. அதாவது, 4,699-லிருந்து 6,266-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு என்ன காரணம்? எது பெண்களை பின் தொடர்ந்து தொல்லை கொடுக்கவும், தன் காதலை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்கள் மீது அமிலம் வீசவும், குடும்பத்துடன் எரிக்கவும் தூண்டுகிறது?

Image copyrightசிவபாலன்

Image captionஇ.சிவபாலன்

இதுகுறித்து, உளவியல் நிபுணர் இ. சிவபாலனிடம் கேட்டபோது, "நிச்சயம், குறிப்பிட்ட நபருக்கு மனநல பிறழ்வு இருக்க வேண்டும். ஆனால், அதே நேரம் இதை உளவியல் சிக்கல் என்ற பார்வையில் மட்டும் சுருக்கிப்பார்க்க முடியாது. ஏதோ மனநோய், அதனால் இப்படி செய்துவிட்டான் என்ற புரிதல் நமக்கு இருக்குமானால், குற்றவாளிகள் அனைவரும் மனநோயாளிகள் என்று பொருளாகிவிடும்", என்றார்.

"உண்மையில், இது ஆளுமைச் சிக்கல். ஆளுமை முற்றாக சிதைக்கப்பட்ட ஒருவரால்தான் இது போன்ற செயல்களில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஈடுபடமுடியும். அவர்கள்தான் சகமனிதர்கள் மீது எந்த பிணைப்பும் இல்லாமல் இருப்பார்கள். அதாவது, ஒருவர் வளர்ந்த சூழல், சமூகச் சூழல், பொருளாதாரச் சுழல் எல்லாம்தான் ஆளுமை சிதைய காரணமாகிறது." என்கிறார்.

ஐதராபாத்: பிச்சைக்காரர்களை அடையாளம் காட்டினால் 500 ரூபாய் சன்மானம்!வங்கதேசம்: பாலியல் தொழிலில் தள்ளப்படும் ரோஹிஞ்சா பெண் அகதிகள்

மேலும் அவர், "இந்த சம்பவத்தையே முறையாக விசாரித்தால், நிச்சயம் இது அவரது முதல் குற்றச் செயலாக இருக்காது. ஏற்கெனவே, அவர் சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவரது சுற்றத்தார், அதிலிருந்து அவர் தப்பிக்க உதவி இருக்க வேண்டும். ஒரு வேளை, அப்போதே அவருக்கு முறையாக ஆலோசனை வழங்கப்பட்டிருந்தால், இந்த பெருங்குற்றம் தவிர்க்கப்பட்டு இருக்கும்." என்கிறார்.

வழக்கறிஞர் அஜிதா இதுபோன்ற குற்றங்களுக்கு சமூக மனக்கண்ணோட்டம்தான் காரணம் என்கிறார்.

Image copyrightAJITHA

Image captionஅஜிதா

அவர் சொல்கிறார்,"பெண்களை பின் தொடர்தல் குற்றம் என நிர்பயா சட்டம் தெளிவாக கூறுகிறது. ஆனால், இங்கு யாரும் அதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வதில்லை. அதுதான் பிரச்சனை. ஓர் ஆண் தன்னை பின் தொடர்ந்து மன உளைச்சலை கொடுக்கும் போது, அந்தப் பெண்ணும், அவரது குடும்பத்தினரும் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றால், அந்த ஆணுக்கு அச்சம் வரும். ஆனால், இங்கு யாரும் அதை செய்வதில்லை".

"தன் வீட்டு கதவின் பூட்டு, கொஞ்சம் நெளிந்திருந்தால்கூட, உடனடியாக காவல் நிலையத்தை அணுகுகிறார்கள், 'எங்கள் வீட்டை யாரோ கொள்ளையடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்` என்று புகார் தருகிறார்கள். ஆனால், அதே தன் பெண்ணுக்கு நேர்ந்தால், அவளை பின் தொடர்ந்தால், அவளை காதலிக்கிறேன் என்று சொல்லி வற்புறுத்தினால், யாரும் காவல் நிலையத்தை அணுகுவதில்லை. அதுதான் இதுபோன்ற ஆண்களுக்கு தைரியம் தருகிறது. இதற்கு காரணம் நமது பழமையான மனநிலையும், சமூகச்சூழலும்தான்".

"பெற்றோர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ, ஒரு பெண், 'என்னை ஒருவன் உற்று உற்றுப் பார்க்கிறான்' என்று கூறினால், அடுத்து அவர்கள் கேட்கும் கேள்வி, 'அது எப்படி உனக்கு தெரியும், அப்படியானால் நீயும் அவனை பார்த்தாயா?' என்பதாகத்தான் இருக்கிறது. குற்றம் சாட்டுபவர் மீதே குற்றம் சாட்டப்படுகிறது. இந்தப் பார்வைதான் பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளுக்கும் முக்கிய காரணம்" என்கிறார் அஜிதா.

இலங்கை: உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்புஏன் இரானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது?

"இன்னொரு பக்கம், திரையுலகம் இந்த வன்முறைகளை ஊக்குவித்து திரைப்படம் எடுக்கிறது. கதாநாயகன் தொடர்ந்து கதாநாயகி பின்னால் சுற்றுகிறான். கதாநாயகி காதலை மறுத்தப்பின்னும் அவளை விடுவதாய் இல்லை. தொடர்ந்து அவள் பின்னால் அலைகிறான். உண்மையில் இது காதலல்ல; வன்முறை" என திரைப்படங்களுக்கும் இத்தகைய வன்முறைகளுக்கு காரணமாக அமைந்துவிடுவதாகச் சொல்கிறார்.

"இதைப் பார்க்கும் நம் இளைஞர்கள் தங்களை கதாநாயகனாக உருவகப்படுத்திக் கொண்டு, பெண்ணின் பின்னால் சுற்றுகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கை ஒன்றும் சினிமா இல்லைதானே? அதனால், அதன் முடிவுகள் இதுபோன்று துயரமானதாகவும், அவலமானதாகவும் இருக்கிறது" என்கிறார்.

மேலும் அவர், "இங்கு சட்டங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், அதை அமலாக்குவதிலும், செயல்படுத்துவதிலும்தான் பிரச்சனை இருக்கிறது. காவல் துறை பெண்களுக்கு எதிரான குற்றங்களை கடுமையாக அணுகவேண்டும். புகார் கொடுக்கப்பட்ட 30 நாட்களில் குற்ற அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும். நீதிமன்றங்களும் பெண்கள் மீதான வன்முறை வழக்குகளில் சமரசத்தில் ஈடுபடாமல் சட்டப்படி தீர்ப்புகளை விரைவாக வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்" என்கிறார்.

'இல்லை', 'முடியாது' என்று சொல்ல ப்பழகுங்கள் என்கிறார் உளவியல் வல்லுனர் நப்பினை சேரன்.

Image copyrightநப்பினை சேரன்

Image captionநப்பினை சேரன்

"நம் வாழ்வியல் தான் இதுபோன்ற சிக்கல்களுக்கு அடிப்படை காரணம். குறிப்பாக நம் பிள்ளைகளிடம் எதற்கும் 'இல்லை', 'முடியாது' என்று சொல்வதில்லை. அதுதான் இதுபோன்ற தீவிர பிரச்னைகளாக உருவெடுக்கிறது. முடியாது என்ற வார்த்தையை தங்கள் குழந்தை பருவத்தில் கடக்காத இளைஞர்களால், ஒரு பெண் தன் காதலை மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அடிப்படையாக, குழந்தை வளர்ப்பிலேயே ஏற்படும் சிக்கல்கள்தான், வளர்ந்து விபரீதமான முடிவுகளை ஏற்படுத்துகிறது. நாம் நம் குடும்பத்துடன் உரையாடவேண்டும். அவர்களுடைய பிரச்னைகளுக்கு செவி கொடுக்க வேண்டும். அவர்கள் கேட்பதை வாங்கி கொடுப்பதுடன் ஒரு பெற்றோரின் கடமை முடிந்துவிடுவதில்லை " என்கிறார் நப்பினை.

மேலும் அவர், "பெண்கள் காவல் துறையிடம் சென்று புகார் தெரிவிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், காவல் துறை எப்படி நடந்துக் கொள்கிறது? மிகுந்த மெத்தனமாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு என் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், எனக்கு தொடர்ந்து தொலைபேசியில் ஓர் அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. அதுகுறித்து காவல் துறையில் புகார் தெரிவித்துவிட்டேன். ஆனால், ஒரு நடவடிக்கையும் இல்லை. சில நாட்களுக்கு முன் ஒரு காவல் துறை அதிகாரி அழைத்து, உங்கள் பகுதி எங்கள் அதிகார எல்லைக்குள் இல்லை. அதனால், உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்கிறார். இப்படி மெதுவாகவும், மெத்தனமாகவும் செயல்பட்டால், எப்படி சாமன்யனுக்கு காவல் துறை மீது நம்பிக்கை வரும். எப்படி புகார் அளிப்பார்கள்?"என்று கேள்வி எழுப்புகிறார்.

பிரச்னை என்று தெரிந்த உடனே பெண்கள் தைரியமாக சட்டத்தின் உதவியை நாட வேண்டும். குடும்பத்தினர் பெண்கள் மீது குற்றம் சுமத்தாமல், அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டும். அதுபோல, காவல் துறையும் துரிதமாக செயல்பட வேண்டும் என்பதுதான் ஆர்வலர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

No comments:

Post a Comment