சென்னை: சென்னையில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கலந்துகொண்டார்.
பங்கஜ்குமார் பன்சால் பேசியதாவது: சென்னை நகரில் 'ஷேர் ஆட்டோ'வில் பயணம் செய்வதற்கும், மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கும் ஒரே கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.வசதி உள்ளது. சுற்றுச்சுழல் பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்க முடியும்.
சென்னையில் 2015ம் ஆண்டு வெள்ளம் பாதித்து எல்லாம் முடங்கியபோதும் மெட்ரோ ரயில் தடையின்றி இயங்கியது. வெள்ளத்தின்போது மின்தடை ஏற்பட்டிருந்தாலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது.
அண்ணாசாலையில், சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ். வரையிலான சுரங்கம் அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும். மெட்ரோ ரெயில் 2வது கட்ட திட்டப்பணிகள் மாதவரம்-சிறுசேரி, ஆயிரம்விளக்கு-கோயம்பேடு, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 107.55 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது.
வடசென்னை பகுதியில் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துவிடும். பிறகு மக்கள் வட சென்னை நோக்கி இடம் பெயரத் தொடங்குவார்கள். வருகிற நிதி ஆண்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அதன்பிறகு கடன் வாங்குதல், டெண்டர் விடுதல் போன்ற பணிகள் நடைபெறும். 2025ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
சென்டிரல் ரயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, பல்லவன் பாலம் உள்ளிட்ட இடங்களில் தினசரி சுமார், 6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதசாரிகள் கடக்கிறார்கள். எனவே அவர்கள் சாலையை கடப்பதற்கு வசதியாக ரிப்பன் மாளிகையில் இருந்து ஒருங்கிணைந்த நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் மாநகர பஸ்கள், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு ஏற்றவகையில் தொழில்நுட்ப பணிகள் நடந்துவருகிறது. வெகுவிரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment