Monday, 19 March 2018

'பெண் வேடத்தில் கொள்ளையடிக்கச் சென்ற வாலிபர்கள்' - தி.நகரில் பரபரப்பு!

சென்னை பாண்டிபஜாரில், பெண்களைப்போல உடையணிந்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை தி.நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவர் ராதாகிருஷ்ணன், ஜி.என்.செட்டி சாலையில் அவரது மனைவியுடன் வசித்துவருகிறார். இவர், நேற்று வீட்டில் இருக்கும்போது, இரண்டு பேர் வீடு வாடகைக்கு கேட்பதுபோல கொள்ளையடிக்க வந்துள்ளனர்.  வந்தவர்களில் ஒருவர் பெண் வேடமிட்டது தெரியவரவே, சுதாரித்த ராதாகிருஷ்ணனும் அவரது மனைவியும் கூச்சலிட்டுள்ளனர். அதனால் கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றனர். இருப்பினும் அருகில் உள்ளவர்கள் இருவரையும் பிடித்து பாண்டிபஜார் போலீஸில் ஒப்படைத்தனர். 

இருவரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்க வந்தவர்கள் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரகாஷ் (27) மற்றும் பழனியைச் சேர்ந்த சுஜந்த் (20)  எனத் தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன்பு சுஜந்த், ராதாகிருஷ்ணன் வீட்டில் வேலைபார்த்துள்ளார். வயதானவர்கள் வீட்டில் இருப்பதை நோட்டமிட்ட சுஜந்த், கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக, பெண் வேடமிட்ட சுஜந்த், வாடகைக்கு வீடு கேட்பதைப்போல பிரகாஷுடன் சென்றுள்ளார். சி.சி.டி.வி கேமரா பதிவிலிருந்தும் தப்பிக்கத்தான் இந்த வேடம் என்று போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான பிரகாஷ், இன்ஜினீயர் என்றும், சுஜந்த் கூலித்தொழிலாளி என்றும் தெரியவந்துள்ளது

Friday, 9 March 2018

தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு மூச்சுத் திணறுவது ஏன்? தவிர்ப்பது எப்படி? மருத்துவ விளக்கம்

தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தை ஒன்று, மூச்சுத்திணறி தன் பிஞ்சு உயிரைவிட்ட பரிதாபம், விழுப்புரத்தில் நடந்திருக்கிறது. இதைப் படித்த நொடியில், பல தாய்மார்கள் தங்கள் குழந்தையை ஒரு நடுக்கத்துடன் அணைத்து முத்தமிட்டுருப்பார்கள். இப்படியும் ஒரு விபரீதம் நடக்குமா? அதற்கான காரணங்கள் என்ன? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ, குழந்தை நல மூத்த மருத்துவர் சீனிவாசன், மூத்த பொதுநல மருத்துவர் ஜோஸ் என மூன்று பேரிடம் கேட்டோம். 

தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணற வாய்ப்பிருக்கிறது! 

இன்றைக்கும் வயதான பாட்டிகள் இருக்கிற வீடுகளில், ''பால் கொடுக்கிறப்போ புள்ளைக்குப் புகைச்சல் ஏறிடாமல் பார்த்துக்கொடு'' என்பார்கள். அந்தப் புகைச்சல் அல்லது புரையேறுதல்தான் விழுப்புரம் குழந்தையின் விஷயத்தில் நடந்திருக்கிறது. குழந்தையானது பாலை வேகவேகமாக உறிஞ்சிக் குடிக்கையில், சின்னச் சின்ன இடைவெளிகளில் மூச்சும் விட்டுக்கொள்ளும். பாலை விழுங்குதல், மூச்சுவிடுதல் என மாறி நடக்கையில், மயிரிழை நேரத்தில் பாலானது உணவுக்குழாய்க்குப் பதிலாக, மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடலாம். இப்படி மூச்சுக்குழாய்க்குள் சென்ற தாய்ப்பால், நுரையீரலுக்குள் நுழைந்து கண்ணிமைக்கும் நொடியில் சிசுவின் மூச்சை நிறுத்திவிடலாம். இது ஒரு காரணம். இன்னொரு காரணம், குழந்தை அளவுக்குத் அதிகமாக தாய்ப்பால் குடித்திருந்தால், அந்தப் பாலை எக்களிக்கும். இது, வாந்தியாக வெளியே வராமல் மூச்சுக்குழாய்க்குள் நுழைந்து, நுரையீரலுக்குள் சென்றுவிடும்போது கண்ணிமைக்கும் நொடியில் இறப்பு நேரலாம். இதைத் தொட்டில் மரணம் என்போம். இந்த இரண்டு சம்பவங்களுமே அரிதினும் அரிதாகவே நடக்கும் விஷயம் என்பதால், இளம் அம்மாக்கள் பயந்துவிட வேண்டாம். 

தாய்ப்பால் குடிக்கும்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுதிணறுவதற்கான காரணங்கள் என்னென்ன? 

* குழந்தைக்கு உட்கார்ந்து பாலூட்டாமல் படுத்தபடியே கொடுப்பதுதான், குழந்தைக்குப் புரையேறுவதற்கான முதல் காரணம். 

* குழந்தை பால் குடித்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதே என்று, அரைத் தூக்கத்தில் எழுப்பி பாலூட்டுவது அடுத்த காரணம். 

* குழந்தையானது பால் குடித்து முடித்த பிறகும், கொஞ்சம்தான் குடிச்சிருக்கு என்று கட்டாயப்படுத்தி, வயிறு முட்ட பாலூட்டுவது மூன்றாவது காரணம். இதுதான் குழந்தைக்குக் குமட்டல் வருவதற்கு முக்கியமான காரணம். 

* குழந்தை முழுங்கும் அளவைவிட அதிகமான அளவு பால் சுரந்தாலும், குழந்தை பாலை விழுங்க கஷ்டப்படும். 

* பெரிய மார்பகங்கள்கொண்ட அம்மாக்கள், தங்கள் குழந்தைக்குப் பாலூட்டும்போது, மார்பகம் குழந்தையின் மூக்கின் மேல் அழுத்தினாலும் மூச்சு திணறும். 

* பெரிய மார்பகங்கள்கொண்ட இளம் அம்மாக்கள், படுத்தவாறு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவே கூடாது. அப்படிப் பாலூட்டும்போது, குழந்தையுடன் சேர்ந்து தூங்கிவிட்டால், அம்மாவின் ஹெவி பிரெஸ்ட்டானது குழந்தையின் மூக்கின் மேல் அழுத்தி விளைவு விபரீதமாகலாம். 

* அன்னப்பிளவு இருக்கும் குழந்தைக்கும் புரையேறுதல் பிரச்னை வரும். இந்த வகை குழந்தையின் அம்மாக்கள், அன்னப்பிளவை ஆபரேஷன் மூலம் சரிசெய்கிற வரை கவனமாக இருக்க வேண்டும். 

* அரிதாக சில குழந்தைகளுக்கு உணவுக்குழாய்க்கும் காற்றுக்குழாய்க்கும் கனெக்‌ஷன் இருக்கும். இந்தப் பிரச்னை இருக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் குடிக்கும்போது அடிக்கடி புரையேறும். இதன் தொடர்ச்சியாக மூச்சுத் திணறும். 

மூச்சுத்திணறலை எப்படித் தவிர்ப்பது? 

* உட்கார்ந்து ஒரு கையால் குழந்தையின் முகத்தில் மார்பு விழாத வண்ணம் பிடித்துக்கொள்ளுங்கள். மறு கையால், குழந்தையின் தலையை அதன் உடம்பைவிடச் சற்று உயர்த்திப் பிடித்து, பால் கொடுங்கள். 

* படுத்தபடி தாய்ப்பால் கொடுப்பதை முற்றிலும் தவிருங்கள். 

* குழந்தை நன்கு விழித்த பிறகுதான் பாலூட்ட வேண்டும். 

* பாசத்தில் குழந்தையின் குட்டி வயிற்றின் கொள்ளளவுத் தாண்டி பாலூட்டாதீர்கள். 

* சில அம்மாக்களுக்கு ஒரு மார்பகத்தில் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் பால் சுரப்பு குறைவான பக்கம் முதலில் பாப்பாவுக்குப் பாலூட்ட ஆரம்பித்தால், அதிகமாகச் சுரக்கிற மார்பிலிருந்து கொஞ்சம் பால் வடிந்துவிடும். இதனால், பாப்பா முழுங்கும் அளவுக்கு மட்டும் பால் சுரக்கும். 

* அன்னப்பிளவு இருக்கும் குழந்தைகளுக்கு, அதைச் சரிசெய்கிறவரை ஒரு பிளேட்போல குழந்தையின் உதட்டில் சொருகி பாலூட்ட வேண்டும். 

* உணவுக்குழாய்க்கும் காற்றுக்குழாய்க்கும் கனெக்‌ஷன் இருக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும்போது அடிக்கடி புரையேறும். இதன் தொடர்ச்சியாக மூச்சுத்திணறல் ஏற்படும். இந்தக் குழந்தைகளை உடனே டாக்டரிடம் அழைத்துச் சென்றுவிடுங்கள்.

Thursday, 1 March 2018

ஸ்ரீபிரியா, சினேகன் உள்ளிட்டோர் கமல்ஹாசன் கட்சி பேச்சாளர்களாக நியமனம்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சினேகன், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன் அதன் நிர்வாகிகளை மேடையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் இன்று கட்சியின் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு: மக்கள் நீதி மய்யத்தின் பேச்சாளர்களாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மெளர்யா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரங்கராஜன், பேராசிரியர் ஞான சம்பந்தன், திரைப்பட தயாரிப்பாளர் கமிலா நாசர், இயக்குநர் முரளி அப்பாஸ், தொழிலதிபர்கள் சிவராமன், செளரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா, பாடலாசிரியர் சினேகன் ஆகியோரும் பேச்சாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

Saturday, 16 December 2017

பெரியபாண்டியனை சுட்டுக் கொன்றது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியே! :- ராஜஸ்தான் காவல்துறை


  

பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 16, 09:28 PM

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8–ந்தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், போலீஸ் ஏட்டுகள் எம்புரோஸ், குருமூர்த்தி, முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.  ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெயத்ரன் தாலுக்கா ராமாவாஸ் கிராமம் தான் பயங்கர கொள்ளையன் நாதுராமின் சொந்த ஊர் ஆகும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த நாதுராமை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோர் தங்களுடன் வந்திருந்த 3 போலீசாருடன் சுற்றி வளைத்தனர்.  இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சென்னை நகர உயர் போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியால் தான் சுட்டுள்ளனர் என்றும், சுட்டது கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தான் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த கொள்ளையன் யார்? என்பதை வெளியிடவில்லை.

தனது துப்பாக்கி, தாக்குதலில் கீழே விழுந்தது என்றும் அதனை பெரிய பாண்டியன் எடுத்துள்ளார் என்றும் முனிசேகர் தனது புகாரில் தெரிவித்து இருந்துள்ளார்.  கொள்ளையர்கள் கட்டை மற்றும் இரும்பு தடியால் தாக்கினர் என்றும் முனிசேகர் புகாரில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல் துறை இன்று தெரிவித்துள்ளது.

Thursday, 14 December 2017

உள்நாட்டில் தயாரான முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் கல்வாரி கடற்படையில் இணைந்தது! #INSKalvari

உள்நாட்டில் தயாரான முதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் கல்வாரியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 


இந்தியக் கப்பற்படைக்கு 3 நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் பணி, மும்பையில் உள்ள மாஸாகான் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டுவந்தது. அந்தவகையில், முதல் உள்நாட்டுத் தயாரிப்பான ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல், முறைப்படி கடற்படையில் இன்று இணைந்தது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ் கல்வாரி கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘மேக் இன் இந்தியா திட்டத்துக்கு சிறந்த உதாரணம், இந்தக் கப்பல்’ எனப் புகழாரம் சூட்டியுள்ளார். 

67.5 மீட்டர் நீளமும், 12.3 மீட்டர் உயரமும்கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், டீசல் மற்றும் மின்சக்திமூலம் இயங்கக்கூடியது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் சத்தமே இல்லாமல் இதன் என்ஜின் இயங்கும் என்பதால், மற்ற நாட்டு ரேடாரால் இதைக் கண்டுபிடிப்பது கடினம். அதிக எடைகொண்ட டோர்பிடோக்கள் எனப்படும் ஏவுகணைகளைச் சுமந்துசெல்லும் திறன்பெற்ற ஐ.என்.எஸ் கல்வாரி, கடலுக்கு அடியில் இருந்தாலும் கடலின் மேற்பரப்பில் இருந்தாலும் அவற்றைச் செலுத்தும் திறன்பெற்றது. அதேபோல, பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸோசெட் ஏவுகணைகளும் இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒரு ஏவுகணை மூலம் எதிரி நாட்டின் மிகப்பெரிய கப்பல்களைக்கூட சுட்டு வீழ்த்திவிட முடியும். 

Tuesday, 12 December 2017

அபூர்வ ராகம் முதல் காலா வரை: ஃபாஸ்ட் மனிதர் ரஜினியின் ஃபாஸ்டஸ்ட் ப்ரொஃபைல்



அபூர்வ ராகம் முதல் காலா வரை: ஃபாஸ்ட் மனிதர் ரஜினியின் ஃபாஸ்டஸ்ட் ப்ரொஃபைல்...

Monday, 11 Dec, 8.05 pm

’தூங்குவது மாதிரி நடிக்கச் சொன்னாலும்  தூங்குவது போல் ஃபாஸ்டாக நடிப்பார். வேகம்தான் அவரின் அடையாளம்’    -    ரஜினிகாந்தை பற்றி அவரது அபிமான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உதிர்த்த வார்த்தைகள் இவை. அப்படிப்பட்ட ஃபாஸ்ட் மனிதரின் ப்ரொஃபைல் பற்றிய ஃபாஸ்டஸ்ட் பதிவு இது.

சொந்த பெயர்  :    சிவாஜிராவ் கெய்க்வாட்

அப்பா :    ராமோஜிராவ் கெய்க்வாட்

பிறந்த நாள்:    12-12-1950

சொந்த மாநிலம் :    கர்நாடகா

உடன் பிறந்தவர்கள்:    இரண்டு அண்ணன்கள் (சத்யநாராயண ராவ்,                                 நாகேஸ்வரராவ்) ஒரு அக்கா (அஸ்வத்)

சிறு வயதில் பிடித்த விளையாட்டு : கிரிக்கெட், ஃபுட்பால்,  பேஸ்கட்பால்

பள்ளிப்படிப்பு  :    கவிபுரம் கவர்மெண்ட் கன்னட மாடல் பிரைமரி ஸ்கூல்.ஆச்சார்யா பாடசாலை.

பள்ளி படிப்புக்குப் பின் பார்த்த வேலைகள்    :    கூலி, கார்பெண்டர்.

கண்டக்டர் வேலை:    பெங்களூரு டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்

மேடை நாடகத்தில் வாய்ப்பளித்தவர் :    முனியப்பா

நண்பர் ராஜ்பகதூர் :    மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர தூண்டியவர்.

அங்கீகரித்த இயக்குநர் :    கே.பாலசந்தர்

முதல் படம்  :    அபூர்வ ராகங்கள் (1975)

முதல் ஜோடி  :    ஸ்ரீவித்யா
முதல் பத்திரிக்கை 

பாராட்டு :    தி இந்து (ஆங்கிலம்)

இரண்டாவது படம் : கத சங்கமா முன்னிலைப்படுத்திய

முதல் படம்:    மூன்று முடிச்சு ரஜினியை ஸ்டைல்

மன்னனாக்கிய செயல்:  மூன்றுமுடிச்சில் வரும் சிகரெட் ஸ்டைல்

நேர்மறை ரோல் தந்த இயக்குநர் :    எஸ்.பி.முத்துராமன்

படம் :    புவனா ஒரு கேள்விக்குறி

ஹீரோவாக முதல் படம்:    பைரவி

வாழ்நாள் விருது        :    சூப்பர் ஸ்டார் பட்டம்

சூட்டியவர்:    தயாரிப்பாளர் எஸ்.தாணு

விருது வாங்கி தந்த படம்:    முள்ளும் மலரும்

முதல் விருது  :    தி பெஸ்ட் ஆக்டர்

என்.டி.ஆர். உடன் நடித்த படம்   :    டைகர்

50 வது படம் :    டைகர்

பிடித்த வட இந்திய நடிகர் :  அமிதாப்

தமிழில் ரீமேக் ஆனஅமிதாப்பின் படங்கள்    :    11

1980ல் இவரை நிலை நிறுத்திய படங்கள்: பில்லா, ஜானி, முரட்டுக்காளை

தென்னிந்திய சினிமாவின் டாப் ஸ்டார் பட்டம் வாங்கி தந்த படம்: பில்லா

காமெடி செய்ய வைத்த படம் :  தில்லுமுல்லு

முதல் இந்திப்படம்  : அந்த கானூன்

கெளரவ நடிகராக முதல் படம்  : அன்புள்ள ரஜினிகாந்த்

நூறாவது படம் : ராகவேந்திரர்

தூள் பறக்க வைத்த படங்கள் : ராஜாதிராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை
தமிழின் முதல் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படம்: ரஜினியின் ராஜா சின்ன ரோஜா

மைல் ஸ்டோன் மூவி  : தளபதி

சூப்பர் ஸ்டாராய் தக்க வைத்த படம்  :  அண்ணாமலை

ரஜினி திரைக்கதை எழுதியபடம்  : வள்ளி

இந்திய சினிமாவின் ஐகான் ஆக ரஜினியை மாற்றிய படம் : பாட்ஷா

இந்தியில் கடைசி படம்  : அட்டனக் கி அட்டனக்

ஜப்பான் மொழியில் ரீமேக் ஆன ரஜினியின் படம்  : முத்து

தென்னிந்திய சினிமாவில் வசூலில் ரெக்கார்டு பிரேக் செய்த படம்   :   படையப்பா

மனக்கசப்பை தந்த படம்  : பாபா

புத்துணர்வு தந்த படம்   : சந்திரமுகி

ஷங்கருடன் முதல் படம்  : சிவாஜி

இந்திய ஹீரோக்களை வியக்க வைத்த ரஜினியின்  சம்பளம் : 26கோடி- சிவாஜியில்

ரஜினியை புதிய பரிமாணத்தில் காட்டிய படம்:  எந்திரன்

உடல் சிக்கலுக்கு ஆளானது :  ராணா பட  துவக்கத்தில்

ரஜினியை தோற்ற ரீதியில் ரசிக்க வைத்த சமீப படம்  : கபாலி

சினிமா துறையில் ரஜினி செய்த சிறந்த சாதனை  :  கறுப்பு வெள்ளை, கலர், 3டி மற்றும்

மோஷன் கேப்சர் : என நான்கு தொழில்நுட்ப தலைமுறையில் நடித்தது

Saturday, 2 December 2017

தலாக் சொல்லி விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறை!

தலாக் சொல்லி விவாகரத்து செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது.

இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதாவை குளிர்கால கூட்டத் தொடரில் இரு அவையிலும் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு அவையிலுமே பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதால், சட்டத்தை நிறைவேற்றுவதில் சிரமம் இருக்காது என்று மத்திய அரசு நம்புகிறது. 

புதிய சட்டத்தின்படி வாயால், எழுத்துபூர்வமாக, வாட்ஸ்அப், கடிதம் என எந்த வழியாக தலாக் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாது. ஆகஸ்ட் 22-ம் தேதி, உச்ச நீதிமன்றதில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 'முத்தலாக் முறை  சட்ட விரோதமானது. அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என்று தீர்ப்பளித்தது. அதற்குப் பின்னரும் முஸ்லிம் பெண்கள் தலாக் சொல்லி விவாகரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து, சிறைத்தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாமிய திருமணச்சட்டம் ஆண்கள் தங்கள் மனைவியை மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்ய அனுமதிக்கிறது. 1,400 ஆண்டுகளாக இஸ்லாமில் தலாக் நடைமுறையில் உள்ளது. குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் டிசம்பர் 5-ம் தேதி தொடங்கி ஜனவரி 15-ம் தேதி நிறைவடைகிறது